இதுவரை,சப்தமில்லாமல் வந்து படித்துள்ளவர்கள் ....

Tuesday 24 September 2013

ஆங்காங்கே பேசிக்கொண்டுதான் உள்ளோம்.......

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் அறையின் வாயிலில் ஒரு குரல் கேட்டது,உள்ளே வரலாமா மேடம் ?

“வாருங்கள் – உங்களைத்தான் தேடிக் கொண்டிருந்தேன், என்ன மதிய நேரம் வரை ஆளையே காணோம் என்று அன்புடன் விசாரித்தார் அக்கா டார்லிங்.

அறையினுள் நுழைந்தார் சுவாமி அருணகிரி.

“காலையில் அனைத்து மத இறைவணக்கம் செய்து முடித்து, நூலகம் சென்று நீங்கள் சொன்ன கட்டுரையை தேடிப் பிடித்து, படித்து வருவதற்கு இவ்வளவு நேரம் ஆகியது மேடம். உங்களுக்குத்தான் இதுபோன்ற புண்ணிய செயல்பாடுகள் செய்யவேண்டிய கவலை இல்லையே – நேராக வந்துவிடுவீர்கள்

.....அக்காவின் நாத்தீகத்தன்மையை மென்மையாகக்  குத்தினார் சுவாமி அருணகிரி.

சாமி, எனக்குத்தான் எந்த முட்டாள்தனமான செயல்பாட்டிலும் நம்பிக்கை இல்லையே, அப்பறம் எப்படி நான்......அதை...... நறுக்கென்றார் அக்கா.

இவர்தான் சுவாமி அருணகிரி, நான் எப்படி இந்திய நாடாளுமன்றத்தின் பிரதிநிதியாக இங்கு கைதிகளின் உளவியல் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறேனோ அதுபோல அவரும் ஒரு ஆய்வினை மேற்கொண்டுள்ளார் என்று அருணகிரியை அறிமுகம் செய்துவைத்தார் அக்கா டார்லிங்.

“நீங்கதான் இன்ஸ்பெக்டர் வீரபாண்டி அவர்களா ?, உங்களைப்பற்றி டி.ஜி.பி நிறைய சொல்லியுள்ளார், இங்குள்ள வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கடவுள் நம்பிக்கையை வைத்து நல்வழிப்படுத்த முடியுமா ? என்பதுபற்றி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளேன். 

முறைப்படி எனக்கு கொடுக்கப்பட்ட அரசு ஆணையை நாளை உங்களிடம் சமர்பிக்க உள்ளேன் என்று கூறி முடித்தார் அருணகிரி.

“பாஸ், இந்த சாமியாருக்கு சனி ஆரம்பித்து விட்டது, அக்கா டார்லிங் கூட சேர்ந்து  குழம்பி போய் இவனும் நாத்திகவாதி ஆகப்போறான் பாருங்க, செத்தாரு சாமி வீரபாண்டியின் காதுகளை கடித்தார் முருகன்.

அவனவனுக்கு எப்போ கெட்ட நேரம்  யாரால வரும்னு எப்படி தெரியும், நாம படுற அவஸ்தையை, சாமி கொஞ்ச நாளைக்கு படட்டும் என்று ஆசீர்வதித்தார் வீரபாண்டி.             
நீங்களும் எங்கள் விவாதத்தில் பங்கேற்கலாம், இன்ஸ்பெக்டர் சார். என்று அழைத்தவாறு தனது கையில் இருந்த குறிப்புகளை மேஜை மீது எடுத்து வைத்தார் அக்கா டார்லிங்.

சிக்மண்ட் பிராய்ட் தனது கடிதத்தில் ஒரு பகுதியில் “ஆயுதங்களின் வருகைக்கு பின்னர், முரட்டு பலம் தனக்குரிய இடத்தை இழந்தது, மனித இனத்தில் முதல் முறையாக மூளையின் தாக்கம், மதிநுட்பம் முக்கியத்துவத்தை பெற்றது. ஆனால் மனிதர்கள் எதற்காக சண்டை போட்டார்களோ அந்த நோக்கம் சற்றும் மாறவில்லை. 

ஏதேனும் ஒரு உரிமைக்கோரிக்கையை எதிர் அணியில் இருப்பவர் கைவிடும்படி செய்ய அல்லது அதுவரை மறுத்துவந்த  ஒரு கோட்பாட்டினை ஒரு அணியினர் ஏற்கவைக்க மக்களுக்கு ஊரு விளைவித்து, அல்லது எதிர் அணியில் உள்ளவர்களை வலுவிழந்து போகும்படி செய்து அதன் பிறகு அவர்களை அடக்குவது என்பதுதான் அந்த நோக்கம்.

எதிரணியில் உள்ளவர்களை திட்டவட்டமாக செயல் இழந்துபோக வைப்பது, அதாவது கருணையின்றி எதிர் அணியில் உள்ளவர்களை கொன்றுவிடுவது இந்த நோக்கை ஈடேற உதவியதுஎன்று அக்கா டார்லிங் கூறினார்.

                         Saint Bartholomew's Day Massacre -

இந்தப்  படம் விக்கிபீடியா தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது 

 “மேடம், இந்த அடிப்படையை தெரிந்துகொள்ள சிக்மண்ட் பிராய்ட் எதற்கு தேவை, நமது இதிகாசங்களில் நிகழ்ந்த மகாபாரத யுத்தத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அசைபோடுவது இந்த செய்திகளை இயம்புமே என்று கூறினார் அருணகிரி.

“சார், நாலாயிரம் வருட அசைபோடுதல் தேவையா? நம் சொந்தங்களை இலங்கையில் ஈவு இரக்கமின்றி இலங்கை ராணுவம் கொன்ற பொழுது இதுபோன்ற ஒரு வெறித்தனம் நிகழ்ந்தது என்று ஏன் கூறக்கூடாது, மக்களுக்கு பழங்கதைகளை கற்றுக்கொடுப்பதைவிட யதார்த்த வாழ்வில் நிகழும் குற்றங்களை பற்றி ஞாபகப்படுத்தினால் குறைந்த அளவிலாவது இனஉணர்வு மக்களிடையே வருமல்லவாஎன்றார் அக்கா டார்லிங்.

“இதுதான் உங்ககிட்ட பெரிய பிரச்சனை மேடம், நீங்க பாட்டுக்க, இலங்கை தமிழர்களின் துன்பங்களை பற்றி பேசுகிறீர்கள், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் – இன்றுகூட மத வழிபாடுத்  தளங்களில் இந்துமத குருக்கள் இராமாயணயுத்தம் பற்றி கோயில்களில் பேசுவார்கள், கிருத்துவ பாதிரியார்கள் பைபிலில் உள்ள  போர் நிகழ்வுகளை பற்றி, நல்லவர்கள் பட்ட துன்பங்கள் பற்றி தேவாலயங்களில் பேசுவார்கள், இஸ்லாமிய இமாம்கள் வெள்ளிக்கிழமை பிரசங்கத்தில் சஹாபாக்களின் தியாகங்கள் பற்றி பேசுவார்கள்.

ஆனால், நீங்கள் சென்ற வாரம் நடந்த சர்வசமய பிரார்த்தனையின் பொழுது ஏன் தமிழ்நாட்டில் உள்ள இந்த மத சடங்குகளின் பொழுது இலங்கையில் தமிழர்கள் அடைந்த துயரம் பற்றி பேசுவதில்லை ? என்று ஒரே போடாக போட்டீர்கள், உங்களுக்கு தைரியம் இருக்கு இப்படியெல்லாம் பேச, இவ்வாறு பேசினால் அது வன்முறையை தூண்டுவதாக ஆகாதா ? என்றார் சுவாமி அருணகிரி.


“என்ன சார், வன்முறை வந்துவிடும் ? - இங்குள்ள தமிழர்களின் இரத்த சொந்தம் தானே இலங்கையில் உள்ளவர்கள், ஒரு குடும்பத்தில் உள்ள  ஒரு பகுதியினர் துன்புறுவதை நினைவு கூர்வது வன்முறையை தூண்டுவதாக ஆகுமா ?

“நாங்கள் என்றோ  நடந்த அநியாயத்தை பற்றி பேசுகிறோம், நீங்கள் இன்று நடப்பதை பற்றி பேசுகிறீர்கள்?, அதை நாங்கள் பாதுகாப்பாக விட்டுவிடுவோம். 

நாங்கள் வெறுமனே அந்த நேரத்துக்கு மக்கள் உணர்வு பெறவேண்டும் என்ற காரணத்தை மனதில் வைத்து செயல்படுவோம்.


 வீரமாக பேசுவது போலவும் இருக்கும்,அமைதியாக கேட்பது போலவும் இருக்கும் - சமீபத்திய செய்திகளை வேண்டுமென்றே தொடாமல் பாதுகாப்பாக பேசுவோம் என்று விளக்கினார் சுவாமி   

இது இரண்டு நிலை இல்லையா , கடவுளை ஏற்கும் நீங்கள் இப்படி செய்யலாமா என்றார் அக்கா டார்லிங் 


“இதனால்தான் சார், கடவுள் நம்பிக்கையாளர்களை நான் அதிகம் நம்புவதில்லை என்று நறுக்கென்று கொட்டினார் அக்கா டார்லிங்.

“ஆங்காங்கே பேசிக்கொண்டுதான் உள்ளோம் மேடம். தனது நிலையை தர்காத்தார் சுவாமி அருணகிரி.


“எங்கெங்கும் பேச வேண்டும் சார் சற்று கோபத்துடன் முடித்தார் அக்கா டார்லிங்.  

No comments:

Post a Comment